கரூர் அருள்மிகு வெண்ணெமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 560 ஏக்கர் நிலங்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைகளைக் கண்டித்து அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் வெண்ணெமலை கோயில் முன்பு தொடர் கண்காணிப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வெண்ணெமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 560 ஏக்கர் நிலங்களை அனுபவித்து வருபவர்கள், கடந்த 1962-ஆம் ஆண்டு முதல் சுமார் 60 ஆண்டுகளாகப் போகப் பயிர் ரசீது பெற்று குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கக் கோரி, திருத்தொண்டர் திரு சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாததால், அது குறித்து மீண்டும் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் விளைவாக, கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், மதுரை உயர்நீதிமன்ற கிளை கடுமையான உத்தரவைப் பிறப்பித்தது. அத்துடன், நில மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, அதுகுறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் எச்சரித்தது. இந்த விவகாரத்தில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வெண்ணெமலை நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கோயில் நிலத்தில் உள்ள குடியிருப்பவர்கள் கோயிலுக்கு வாடகை செலுத்த வேண்டும் அல்லது நிலத்தை காலி செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, கடந்த மாதம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வெண்ணெமலை குடியிருப்புகளில் சுமார் 7 கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் அந்நியர்கள் நுழையக் கூடாது என எச்சரிக்கை பதாகைகளும் வைக்கப்பட்டன. இந்த சீல் வைப்பு நடவடிக்கையைக் கண்டித்து, கடந்த சில வாரங்களாக இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக மீண்டும் சீல் வைப்பு நடவடிக்கையை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் கட்சிகள் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரிகளையும் திருத்தொண்டர் திரு சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் பலமுறை போலீஸ் பாதுகாப்புடன் கடந்த சில தினங்களுக்கு முன் கோயில் நிலங்களில் குடியிருப்புவாசிகள் வீடுகளுக்குச் சென்று, நிலங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டதாகவும், கோவில் நிர்வாகத்திற்குச் சொந்தமான வணிக வளாகங்களில் இருந்த கடைகளுக்கு சீல் வைத்ததாகவும் தெரிகிறது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் நிலங்களை மீட்கும் பணி நடைபெற்றாலும், நீண்டகாலமாக அங்கு வசிப்பவர்கள் மற்றும் வணிகம் செய்பவர்கள் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்றனர். வெண்ணெமலை கோயில் நில விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களை மீட்பதில் இந்து சமய அறநிலையத்துறையினர் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்த மீட்பு நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. உட்பட 17 பேர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
