கரூர் கூட்ட நெரிசல் : பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

கரூரில் 41 உயிர்களை பலி கொண்ட கூட்ட நெரிசல் விபத்தில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவர்கள் தெரிவித்ததாவது, உயிரிழந்தவர்களில் சுமார் 25 பேர் கடைசி 2-3 நிமிடங்கள் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோருக்கு விலா எலும்புகள் முறிந்து, உள்ளுறுப்பு சேதம் ஏற்பட்டதே உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 10 குழந்தைகள், 20 பெண்கள் உட்பட மொத்தம் 41 பேர் அடங்குவர்.

இவர்களில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 28 பேர்.

ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தோர் தலா 2 பேர்; சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

52 பேர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் 61 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குழந்தைகள் உயிரிழப்பு :

உயிரிழந்த 10 குழந்தைகளின் நுரையீரல் மற்றும் உள் உறுப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. விலா எலும்பு, கழுத்து எலும்பு உடைதல், முதுகு மற்றும் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில்தான் இந்த விபத்து நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். தள்ளுமுள்ளால் பலர் மயங்கி கீழே விழுந்ததால் உயிரிழப்புகள் அதிகரித்தன.

Exit mobile version