அரவக்குறிச்சி – புங்கம்பாடி சாலைப் பணிகள் நிறைவு தரம் குறித்து கரூர் கோட்டப் பொறியாளர் நேரில் கள ஆய்வு!

அரவக்குறிச்சி அருகே ஆறு ரோடு முதல் புங்கம்பாடி வரை மேற்கொள்ளப்பட்ட சாலை உறுதிப்படுத்தல் பணிகள் முடிவடைந்த நிலையில், அதன் தரம் மற்றும் அகலம் குறித்து நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். ரூ. 2.95 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்பத்துடன் இந்தச் சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (CRIDP) கீழ், 2025-26ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் படி பல்வேறு சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அரவக்குறிச்சி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஆறு ரோடு சந்திப்பில் இருந்து புங்கம்பாடி கிராமம் வரை செல்லும் 8 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை, பலத்த மழையைத் தாங்கும் வகையில் உறுதிப்படுத்தும் பணிக்காகத் தேர்வு செய்யப்பட்டது.

மொத்தம் ரூ. 2.95 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற இந்தப் பணிகள் கடந்த சில வாரங்களாகத் தீவிரமாக நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சாலையின் உறுதித்தன்மை குறித்து கரூர் தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உயர்மட்டக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, சாலையின் அகலம் சரியாக உள்ளதா, தார் கலவையின் தடிமன் (Thickness) ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி போடப்பட்டுள்ளதா மற்றும் சாலையின் ஓரங்கள் முறையாகப் பலப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து நவீனக் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது கரூர் தரக்கட்டுப்பாடு உதவி கோட்டப் பொறியாளர் கார்த்திகேயன், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்டப் பொறியாளர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்து விளக்கமளித்தனர். மேலும் உதவிப் பொறியாளர்கள் வினோத் குமார், அசாருதீன், நிவேதா மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆய்வில் பங்கேற்றனர்.

புங்கம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள், விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்லவும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லவும் இந்தச் சாலை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. நெடுங்காலமாகச் சீரமைக்கப்படாமல் இருந்த இந்தச் சாலை தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தரக்கட்டுப்பாட்டு ஆய்வின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், இந்தச் சாலை முறையாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாக அர்ப்பணிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version