தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அவருக்கு பரந்த ரசிகர் வட்டம் உள்ளது. இவர் மீது கொண்ட அபிமானத்தால், அவரது ரசிகர்கள் வெறும் சினிமா ரசிகர்களாக இல்லாமல், பல சமூக நலத் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தியின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இரத்த தானம் நடத்தினர். குறிப்பாக, சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கார்த்தியின் ரசிகர்கள் இரத்த தானம் செய்தனர்.
இந்த இரத்த தான நிகழ்வில் கலந்துகொண்ட 250 ரசிகர்களை நடிகர் கார்த்தி நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். சென்னை தியாகராய நகர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில், இரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, விருந்தளித்தார். மேலும், அவர்களுடன் நினைவாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது பேசிய நடிகர் கார்த்தி கூறியதாவது:
“பிறந்த நாளன்று உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. நான் ஊரில் இல்லை. ஆனால், இவ்வளவு பேர் இரத்த தானம் செய்த செய்தியை அறிந்தபோது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. என் நண்பர் வைத்திருக்கும் வாட்ஸ்அப் குழுவில் ‘இரத்தம் கிடைக்கவில்லை’ என்று அடிக்கடி செய்திகள் வந்துகொண்டே இருக்கும். இன்னும் நம் நாட்டில் இரத்தம் கிடைப்பது ஒரு பெரிய பிரச்சனையாகவே உள்ளது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் அனைவரும் இரத்த தானம் செய்ததன் மூலம் பல அம்மாக்கள், குழந்தைகள், மற்றும் குடும்பத்தினரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளீர்கள். இதற்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். இரத்த தானம் கிடைத்த பிறகு முகத்தில் தெரியும் அந்த சிரிப்பு விலைமதிப்பற்றது.
உங்களை பார்க்கும்போது தோன்றுவது, நீங்களும் என் குடும்பமே என்ற உணர்வுதான். உங்கள் அன்புக்கு நன்றி சொல்லும் வார்த்தைகள் போதாது. உங்கள் பெருமைக்கு ஏற்ப நான் எப்போதும் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டியவன். உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனதிலிருந்த பாராட்டையும், அன்பையும் தெரிவித்து, ‘Love You’ என்று சொல்லவேண்டும்.” என தெரிவித்தார்.
அத்துடன், நடிகர் கார்த்தி தற்போது தனது அடுத்த திரைப்படமான மார்ஷல் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதையும், “மீண்டும் வேட்டி அணிந்து, மீசை முறுக்கி நடிக்க இருக்கிறேன்” என்றும் உற்சாகமாக கூறினார்.