கோயம்புத்தூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோயிலில், இந்த ஆண்டுக்கான மாசிமகத் தேர்த்திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் அரங்கநாத பெருமாள் அன்னப்பட்சி, சிம்மம், அனுமந்தன், கருடன் மற்றும் யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேர் வடம்பிடித்தல் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெற்றது.
தேரோட்டத்திற்கு அடுத்த நாளான நேற்று, இக்கோயிலின் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான ‘தண்ணீர் சேவை’ மற்றும் ‘பந்த சேவை’ நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக, மாலையில் நடைபெற்ற பந்த சேவையின்போது காரமடை நகரமே விளக்கொளியில் ஜொலித்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரண்டிருந்த பக்தர்கள், பெரிய அளவிலான தீப்பந்தங்களை ஏந்தி, தாரை தப்பட்டை முழங்க, ஜமாப் இசையுடன் நடனமாடியபடி நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்த ஆண்டின் பந்த சேவையில், கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் சுமார் 100 கிலோ எடையுடைய பிரம்மாண்ட பந்தத்தை ஏந்தி வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சுமார் 400 மீட்டர் நீளமுள்ள காடாத்துணியை எண்ணெயில் ஊறவைத்து, நூல் கயிற்றால் கட்டி மிக நுணுக்கமாக இந்தப் பந்தம் தயாரிக்கப்பட்டது. இது குறித்துப் பக்தர்கள் கூறுகையில், “கொடியேற்ற நாளிலிருந்து கடும் விரதமிருந்து, சரவணம்பட்டியில் இருந்து கால்நடையாகப் பந்தத்தை எடுத்து வந்து, வீடு வீடாக ‘உஞ்சை விருத்தி’ (பிச்சை எடுத்தல்) பெற்று, பின்னர் கோயிலுக்கு வந்து அரங்கநாதரைத் தரிசனம் செய்வதைப் பரம்பரையாகச் செய்து வருகிறோம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
கோயில் அர்ச்சகர்கள் இந்தப் பாரம்பரியம் குறித்து விளக்குகையில், “காரை மரங்கள் நிறைந்த வனப்பகுதியில் பந்தம் ஏந்திச் சென்றபோதுதான் அரங்கநாத பெருமாள் பக்தர்களுக்குக் காட்சியளித்தார் என்பது ஐதீகம். அந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூரும் வகையிலேயே இந்தப் பந்த சேவை 8-ம் நாள் பரிவேட்டை தினத்தன்று நடைபெறுகிறது. இதற்கு முன்பாகத் திருக்கோயில் ஸ்தலத்தார்களிடம் இருந்து முத்திரை பெறுவது அவசியமாகும்” என்றனர். பந்த சேவையைத் தொடர்ந்து, இன்று புதன்கிழமை முக்கிய நிகழ்வான ‘கவளம்’ சேவை நடைபெற உள்ளது. இதில் வாழைப்பழம் மற்றும் கரும்புச் சர்க்கரை உள்ளிட்டவற்றை ஒன்றாகப் பிசைந்து இறைவனுக்குப் படைக்கப்பட்டு, பின்னர் தாசர்களுக்கு வழங்கப்படும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் காரமடை நகரம் ஆன்மீகப் பெருவிழாக் கோலம் பூண்டுள்ளது.















