முதல்வர்கள் இருவரின் கைது நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றிய அமலாக்கத் துறை (ED) அதிகாரி கபில் ராஜ் திடீரென தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் கடந்த ஆண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்டார். அதேபோல், டெல்லி மதுவிலக்கு கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த இரு சம்பவங்களிலும், கைது உத்தரவை தயார் செய்ததோடு, வழக்கு நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தவர் கபில் ராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர் திடீரென ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கபில் ராஜின் முடிவை நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அமலாக்கத் துறையில் 8 ஆண்டுகள் பணியாற்றிய கபில் ராஜ், அண்மையில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (GST) புலனாய்வு பிரிவின் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டிருந்தார். ரூ.13,000 கோடி மோசடி வழக்கில் நிதி குற்றவாளிகள் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் முகுல் சோக்ஸி மீது விசாரணை நடத்தியதும் இவரே.
உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரைச் சேர்ந்த கபில் ராஜ், பி.டெக் பட்டதாரி. 2009ம் ஆண்டு இந்திய வருவாய் சேவையில் (IRS) சேர்ந்த இவர், பணியிலிருந்து ஓய்வு பெற இன்னும் 15 ஆண்டுகள் உள்ள நிலையில் ராஜினாமா செய்துள்ளதால் இது அரசியல் வட்டாரத்தில் கவனம் செலுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது.