ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கே பெருமை சேர்த்த கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு, சென்னை கண்ணகி நகர் கூடைப்பந்து மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு பாராட்டுச் சொன்னார். அவர் பேசியபோது,
“குறுகிய காலத்தில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். கார்த்திகாவுக்கான பாராட்டு விழாவை நேரு ஸ்டேடியத்தில் நடத்தலாம் என்பதற்குப் பதிலாக, அவரின் பேட்டியைப் பார்த்தபின் கண்ணகி நகரில்தான் நடத்த வேண்டும் என முடிவு செய்தோம். இங்கு உள்ள மக்களின் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியே அந்த முடிவை சரியாக்குகிறது. கார்த்திகா எனக்கு ஒரு பேத்தி மாதிரி தான். கபடி மைதானம் அமைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை முதல்வரும் துணை முதல்வரும் ஏற்றுள்ளனர். சிந்தடிக் கபடி மைதான பணிகள் நடைபெற்று வருகின்றன; மேலும் 20 நாட்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைப்பார்,” என தெரிவித்தார்.
பின்னர் கார்த்திகா நன்றியுரையாக பேசும்போது “எனக்கு உதவிய பயிற்சியாளரும், கண்ணகி நகரைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. முன்பு வெளியில் வேலைக்கு சென்றால் ‘கண்ணகி நகர்’ என்றால் வேலை கொடுக்க மாட்டார்கள். ஆனால் இனி பெருமையாக சொல்வோம் நாம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர்கள் என்று!” என்று தெரிவித்தார்.
இதையடுத்து இன்று காலை, கார்த்திகா சென்னை இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முன்னதாக, ஆசிய இளையோர் கபடி (மகளிர்) போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகாவுக்கும், ஆடவர் பிரிவில் தங்கம் வென்ற அபினேஷுக்கும் ஊக்கத்தொகையாக ரூ.25 லட்சம் அறிவித்திருந்த தமிழக அரசை, அதை ரூ.1 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

















