“கமல் உரிய பதில் சொல்வார் ; ஆனால் நீங்கள் ?” – மொழி விவகாரத்தில் ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தின் புரமோஷன் நிகழ்வுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் சென்னை மாநகரில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரபல கன்னட நடிகரும், நடிகர் ராஜ்குமாரின் மகனுமான சிவராஜ்குமார் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், “எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி கன்னடம். அது தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தின் ஒரு அங்கம்” என கூறினார்.

இந்த கருத்துகள் கர்நாடகா மாநிலத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பின. ‘தக் லைஃப்’ படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டதுடன், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இதற்கு பதிலளித்த கமல், “அன்பு என்றால் மன்னிப்பே தேவையில்லை” என தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில், எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்த சிவராஜ்குமார், “கமல் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் என்ன சொன்னார் என்பதையும், அதற்கு என்ன விளக்கம் என்பதையும் நன்றாகவே புரிந்தவர். அவர் உரிய நேரத்தில் சரியான பதிலைத் தருவார்.

ஆனால், கன்னட மொழியை நேசிப்பவர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை வெளிப்படுத்த வேண்டும். புதுமுகங்கள் வரும் போதும் ஆதரிக்க வேண்டும். பெரிய நடிகர்களின் படங்கள் வரும் போது மட்டும் பேசுவது சரியல்ல. கன்னடத்திற்காக என் உயிரையும் கொடுக்கத் தயார் ” எனக் கூறினார்.

Exit mobile version