2019-ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன மற்றும் வசூல் ரீதியாக வெற்றியை பெற்ற ‘காளிதாஸ்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம், ‘காளிதாஸ் 2’, உருவாகியுள்ளது. இந்தப் படத்தை முதல் பாகத்தையும் இயக்கிய ஸ்ரீ செந்தில் தான் இயக்கியுள்ளார்.
பரத் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்தில், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘ஆடுகளம்’ கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி, ராஜா ரவீந்தர், டி.எம். கார்த்திக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதனுடன், ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கிதா, இந்தப் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு மறுபடியும் ரீ-என்ட்ரி செய்துள்ளார். இப்படத்தில் அவர் ஒரு தாக்கம் மிகுந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்த படம் ஒரு கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இதனை பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான பைவ் ஸ்டார் செந்தில், அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்கை பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், தற்போது பிந்தைய பணிகள் முழுசாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ‘காளிதாஸ் 2’ படத்தின் டீசரை நடிகர் ரவி மோகன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் நாளை வெளியிட உள்ளனர்.