தாயுமானவர் திட்டத்தில் திருச்சிக்கு ரூ. 37.75 கோடி நலத்திட்ட உதவி  கே.என். நேரு வழங்கினார்

திருச்சியில், தாயுமானவர் திட்டத்தின் கீழ் கல்வி, சுய தொழில் உதவி மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 2,058 பயனாளிகளுக்கு ரூ. 37.75 கோடி மதிப்பிலான உதவிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு சனிக்கிழமை வழங்கினார். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு நாளையொட்டி தமிழக அரசின் சார்பில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். சென்னை நிகழ்வின் காணொலி, திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய அமைச்சர் கே.என். நேரு, கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளையும் பெற்றுத்தரும் வகையில் தாயுமானவர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களால் தமிழகத்தில் மகளிர் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரும் எண்ணற்ற வகையில் பயனடைகின்றனர் என்று குறிப்பிட்டார். அந்த வகையில், அம்பேத்கர் நினைவு நாளில் திருச்சி மாவட்டப் பயனாளிகளுக்கு ரூ. 37.75 கோடி மதிப்பில் உதவிகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். விழாவில் மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், மேயர் மு. அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் செ. ஸ்டாலின்குமார், சீ. கதிரவன், ந. தியாகராஜன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

Exit mobile version