நகர் மன்ற பெண் உறுப்பினரின் காலில் விழுந்த இளநிலை உதவியாளர் – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு !

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளர் முனியப்பன், நகர் மன்ற பெண் உறுப்பினரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சி சிசிடிவியில் பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நகராட்சியில் பணியாற்றி வரும் முனியப்பன், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வந்தார். அப்போது திண்டிவனம் 20ஆம் வார்டைச் சேர்ந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ரம்யா, 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற மேம்பாட்டு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கோப்புகளை கேட்டார். பழைய கோப்புகளை தேடித் தருவதில் தாமதம் ஏற்பட்டதால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, முனியப்பன் தகாத வார்த்தைகள் பயன்படுத்தினார் என ரம்யா, திண்டிவனம் நகர் மன்றத் தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரனிடம் முறையிட்டார். தலைவர் இல்லாத நிலையில், ரவிச்சந்திரன் அலுவலகத்திலேயே பஞ்சாயத்து நடத்தியதாக தெரிகிறது.

அப்போது முனியப்பன், நடந்ததற்கு வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், ரம்யா தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். மேலும், “அப்படி செய்யாவிட்டால் உன்னை வேலையில் இருந்து நீக்கிவிடுவோம்” என மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வேறு வழியின்றி, முனியப்பன் கண்ணீருடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

இந்த நிகழ்வு யாருக்கும் தெரியாது என நினைத்த நிலையில், நகராட்சி ஆணையர் அறையில் இருந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியானதால் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக திமுக, அதிமுக, விசிக நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ரம்யா மற்றும் ரவிச்சந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து நகராட்சி மேலாளர் நெடுமாறன் மற்றும் திண்டிவனம் டிஎஸ்பி பிரகாஷ் ஆகியோரிடம் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கட்டாயப்படுத்தி காலில் விழ வைக்கப்பட்ட முனியப்பன், சமீபத்தில் சுதந்திர தின விழாவில் சிறந்த பணியாளராக மாவட்ட ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியரிடம் நடந்த இந்த அவல சம்பவம் குறித்து அதிகாரிகள் எவ்வாறு நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? என்பது தற்போது பரபரப்பான கேள்வியாக உள்ளது.

Exit mobile version