இந்தியாவின் முன்னணி எஃகு உற்பத்தியாளரான JSW ஸ்டீல் லிமிடெட், 2024-25 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.2,209 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான ரூ.867 கோடியை விடக் கணிசமான உயர்வாகும். அதிக உற்பத்தி மற்றும் விற்பனை அளவுடன், நிலக்கரி விலை சரிவும் லாபம் உயர்வுக்கு காரணமாகும்.
உயர்ந்த வருவாய் மற்றும் குறைந்த செலவுகள் :
நிறுவனம் வெளியிட்ட நிதி அறிக்கையின்படி, ஒருங்கிணைந்த வருவாய் ரூ.43,147 கோடியாகும். இது கடந்த ஆண்டின் ரூ.42,943 கோடியை விட சற்றே அதிகம். முக்கிய மூலப்பொருளான கோக்கிங் நிலக்கரியின் விலை குறைவது, செலவினங்களில் கிழிவு ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுரங்க ராயல்டிகள் குறைவதும் நிறுவனம் பெறும் நன்மையை அதிகரித்துள்ளது.
EBITDA 37% உயர்வு :
வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தவிர்த்த வருவாய் (EBITDA) ஆண்டுக்கு 37% உயர்ந்து ரூ.7,576 கோடியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு வரியின் தாக்கம் :
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவான எஃகு மீது அரசு விதித்த 12% பாதுகாப்பு வரி, இந்திய எஃகு தொழிலை காக்கும் வகையில் உதவியாக அமைந்துள்ளது. இது விற்பனை விலைகளை நிலைநிறுத்துவதற்கு காரணமாகியுள்ளது. ஆனால் இது ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும் எனவும், விலை நிலைத்தன்மையை உறுதி செய்ய அரசு மேலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என JSW ஸ்டீல் தெரிவித்துள்ளது.
முதலீடு மற்றும் உற்பத்தி வளர்ச்சி :
2025-26 நிதியாண்டிற்காக நிறுவனம் 30.5 மில்லியன் டன் உற்பத்தி, மற்றும் 29.2 மில்லியன் டன் விற்பனை என வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. மூலதனச் செலவில், தற்போதைய காலாண்டில் மட்டும் ரூ.3,400 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட ரூ.20,000 கோடி முதலீடு பின்னர் ரூ.16,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி மற்றும் விற்பனை தரவுகள் :
ஒருங்கிணைந்த உற்பத்தி – 7.26 மில்லியன் டன் (14% உயர்வு)
விற்பனை அளவு – 6.69 மில்லியன் டன் (9% உயர்வு)
எதிர்பார்ப்புகள் மற்றும் சவால்கள் :
சீனாவில் உற்பத்தி குறைந்த போதும், அவர்களது ஏற்றுமதி அதிகரிப்பது இந்திய ஸ்டீல் தொழிலுக்கு ஒரு சவாலாகவே இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசு பாதுகாப்பு வரியை மீண்டும் பரிசீலிக்கும்போது, அதற்கான சாதகமான முடிவுகளை எதிர்பார்த்துள்ளது.
மேலும், பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை JSW ஸ்டீல் பெற்றுள்ளதாகவும், அதன் நிதி முடிவுகள் தற்போதைய ஒருங்கிணைந்த கணக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பங்கு நிலை :
BSE சந்தையில், வெள்ளிக்கிழமை JSW ஸ்டீல் பங்கு ரூ.1,034.40 ஆக மாறாமலே முடிந்தது. இந்த ஆண்டில் இதுவரை பங்கு மதிப்பு 14.24% உயர்ந்துள்ளது.