சாத்தூரில் நடைபெற்ற மதிமுக நெல்லை மண்டல செயல்வீரர்கள் கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது கட்சியினர் திடீரென தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மதிமுகவின் நெல்லை மண்டல செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் பங்கேற்றனர். தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட செயல்வீரர்கள் இதில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் போது வைகோ உரையாற்றிக் கொண்டிருந்தபோது, சில செய்தியாளர்கள் நிகழ்ச்சியை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சில மதிமுக நிர்வாகிகள், உள்ளே காணப்பட்ட காலி நாற்காலிகளை படம் எடுக்கக் கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், பதற்றம் அதிகரித்து, மதிமுகவினர் செய்தியாளர்களை நோக்கி திடீரென தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.