இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி, புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இதுவரை இரு போட்டிகள் முடிந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இந்த போட்டியில், 2021 பிப்ரவரிக்குப் பிறகு டெஸ்ட் அரங்கில் மீண்டும் களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் 2வது டெஸ்டுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியில் திரும்பியுள்ளார்கள்.
வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற இந்த பீச்சில், தொடக்கத்திலேயே இங்கிலாந்து ரன்கள் சேர்த்தாலும், விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்தது. முதல் நாள் முடிவில், இங்கிலாந்து அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்துள்ளது.
ஜோ ரூட் 99 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் நின்று வீரர்களை நம்பிக்கையுடன் வழிநடத்தி வருகிறார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடன் அவருக்கு துணையாக களத்தில் உள்ளார்.
இந்திய அணிக்காக, நிதிஷ்குமார் ரெட்டி 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளாா். பும்ரா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இன்று நடைபெறவுள்ள 2வது நாள் ஆட்டத்தில் பந்துவீச்சுக்கு ஏற்ற சூழல் தொடருமா? அல்லது இங்கிலாந்து பேட்டர்கள் தொடக்கத்தை வலுப்படுத்துவார்களா என்ற கேள்வி, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.