திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78-வது ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி என்.ஜி.ஆர் ரோட்டில் மிக விமரிசையாக நடைபெற்றது. பல்லடம் நகரச் செயலாளர் பானு பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நகரமே விழாக்கோலம் பூண்டு கட்சி கொடிகளுடனும், தோரணங்களுடனும் காட்சியளித்தது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்த எழுச்சி மிகு விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மற்றும் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் ஏழை எளிய மக்களுக்குத் தேவையான தையல் இயந்திரங்கள், வேட்டி-சேலைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்புரையாற்றினர். அப்போது, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், கட்சியின் தற்போதைய களப்பணிகள் குறித்தும் விரிவாகப் பேசினர். முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் கரைபுதூர் நடராஜன், கே.பி.பரமசிவம் மற்றும் தலைமைக் கழகப் பேச்சாளர் நடிகை பபிதா ஆகியோரும் அனல் பறக்கும் உரையாற்றி தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்டச் சார்பு அணி நிர்வாகிகள் ஹரிகோபால், புத்தரசல் பாபு, சிவாச்சலம், சிடிசி பழனியப்பன், சிராஜ்தீன், அஸ்கர் அலி, சித்துராஜ் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் யு.எஸ்.பழனிசாமி, காட்டூர் சிவப்பிரகாஷ், பரணிதரன், தர்மராஜ், கோகுல், சுப்பிரமனியம், பனப்பாளையம் லட்சுமணன், இடுவாய் ஜெ.ஜெ.மணி மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த ஞாம்பிக்கை, வனஜா உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள், நகரப் பொறுப்பாளர்கள் எனப் பெரும் திரளானோர் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்ததால் பல்லடம் என்.ஜி.ஆர் சாலை பகுதியே மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
















