தமிழகத்தின் பூ சந்தைகளில் பிரசித்தி பெற்ற மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில், மல்லிகைப் பூவின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு கிலோ 6,000 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடும் பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு, மல்லிகையின் மணத்தைப் போலவே விலையையும் எட்டாத உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நிலக்கோட்டை, உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்கள் தினசரி மாட்டுத்தாவணி சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன. வழக்கமாகச் சில டன் கணக்கில் வரும் மல்லிகைப் பூக்கள், தற்போது நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, தினசரி 300 கிலோவுக்கும் குறைவாகவே வரத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செடிகளிலேயே மொட்டுகள் கருகி விடுவதால், சந்தைக்கு வரும் பூக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து, அதன் நேரடி எதிரொலியாக விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
நேற்று நிலவரப்படி, மல்லிகை கிலோ ரூ.6,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ கிலோ ரூ.1,200, முல்லை ரூ.1,300, கனகாம்பரம் ரூ.1,500 என விற்பனையாகிறது. அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்படும் பன்னீர் ரோஸ் ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.120, அரளி ரூ.300, சம்பங்கி ரூ.150 எனப் பூக்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. தெய்வீக வழிபாட்டிற்குப் பயன்படும் தாமரை மலர் ஒன்று 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் கூறுகையில், “கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு இத்தகைய வரலாறு காணாத விலை உயர்வை நாங்கள் இப்போதுதான் பார்க்கிறோம். நிலக்கோட்டை போன்ற மற்ற சந்தைகளிலும் மல்லிகை விலை ரூ.6,000-ஐத் தாண்டியுள்ளது. வரும் ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை வருவதால், அன்றைய தினம் தேவை அதிகரித்து விலை இப்போதைய விலையை விட இரண்டு மடங்கு உயரவும் வாய்ப்புள்ளது. பனிப்பொழிவு குறைந்து, வெயில் வரத் தொடங்கும் பிப்ரவரி மாதத்திற்குப் பிறகே உற்பத்தி அதிகரித்து விலை குறையத் தொடங்கும்” எனத் தெரிவித்தனர். இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் மற்றும் மாலை கட்டும் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
