சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ விலை கிடுகிடு உயர்வு ஒரே கிலோ ரூ.4,300-க்கு விற்பனை!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அமைந்துள்ள தமிழகத்தின் மிக முக்கிய மலர் சந்தைகளில் ஒன்றான சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கச் சந்தையில், இன்று மல்லிகைப் பூவின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,700-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.1,600 வரை விலை அதிகரித்து, ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.4,300-க்கு ஏலம் போனது. வரத்து குறைவு மற்றும் முகூர்த்த நாட்களை ஒட்டிய தேவை அதிகரிப்பு காரணமாக இந்த அதிரடி விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தாளவாடி, பவானிசாகர், டி.என். பாளையம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து நாள்தோறும் டன் கணக்கில் பூக்கள் இந்தச் சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன. சமீபகாலமாக நிலவி வரும் பனிப்பொழிவு மற்றும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மல்லிகைப் பூக்களின் விளைச்சல் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் சந்தைக்கு வரும் பூக்களின் வரத்து சரிந்த அதே வேளையில், பொங்கல் பண்டிகை நெருங்குவதாலும், சுப முகூர்த்த தினங்கள் வரிசையாக வருவதாலும் பூக்களுக்கான தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் விளைவாகவே மல்லிகைப் பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மல்லிகைப் பூவைப் போலவே மற்ற மலர்களின் விலையும் சந்தையில் இன்று உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ முல்லைப் பூ ரூ.1,400-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் விற்பனை செய்யப்பட்டன. அதேபோல், செவ்வந்தி பூ ஒரு கிலோ ரூ.100-க்கு ஏலம் போனது. மல்லிகைப் பூவின் விலை கிலோ ரூ.4,000-ஐத் தாண்டியுள்ளதால் சில்லறை விற்பனையில் ஒரு முழம் பூவின் விலை சாமானிய மக்கள் வாங்க முடியாத நிலைக்கு உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்த விலை உயர்வு மல்லிகைச் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு ஓரளவிற்கு நிம்மதியைத் தந்துள்ள போதிலும், விளைச்சல் மிகவும் குறைவாக இருப்பதால் அதன் முழுமையான பலன் தங்களுக்குக் கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். வரத்து மேலும் குறையும் பட்சத்தில் வரும் நாட்களில் பூக்களின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version