உடல்நலக் காரணத்தால் மட்டுமே ஜக்தீப் தன்கர் ராஜினாமா : அமித்ஷா விளக்கம்

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தது தொடர்பான விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

“உடல்நலப் பிரச்னைகளின் காரணமாகவே ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். இதற்குப் பிற வேறு காரணம் எதுவும் இல்லை” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

ஒரு ஆங்கிலச் செய்தி சேனலுக்கு வழங்கிய பேட்டியில், எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்திற்காக பொய்யான பிரசாரம் செய்து வருவதாகவும் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

“பாராளுமன்றத்தில் சபாநாயகர் உத்தரவின் பேரில்தான் CISF படையினர் நுழைகிறார்கள். இதற்கு எதிர்க்கட்சிகள் சாக்குப்போக்குகளை தேடுகின்றன. அவர்கள் தேர்தலில் அடைந்த தோல்விகளால் விரக்தியடைந்து, பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர்,” என்றார்.

அதனைத் தொடர்ந்து, 130வது திருத்தச்சட்டம் குறித்து அவர் பேசினார். “ஒரு முதல்வர், பிரதமர் அல்லது எந்த தலைவரும் சிறையில் இருந்தபடியே பதவி வகிப்பது நமது ஜனநாயகத்தின் கண்ணியத்திற்கு ஏற்றதல்ல. அதனால் தான், சிறை தண்டனை கிடைத்தால் தானாகவே ராஜினாமா செய்ய வேண்டும் என்ற விதியை இந்த திருத்தத்தில் சேர்த்துள்ளோம். இல்லையெனில் சட்டப்படி அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள்,” என்று விளக்கம் அளித்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சியை விமர்சித்த அவர், “ராகுல் காந்தி பீஹாரில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவை கட்டிப்பிடிக்கிறார். இது இரட்டை நிலைப்பாடு அல்லவா?” என்றும் கேட்டார்.

ஜக்தீப் தன்கரின் சேவையைப் பாராட்டிய அமித்ஷா, “தனது பதவிக்காலத்தில் அரசியலமைப்பு விதிகளை மதித்து சிறப்பாக பணியாற்றினார். அவரின் ராஜினாமாவுக்குப் பிற காரணங்களை தேடுவது தேவையற்றது,” என்று குறிப்பிட்டார்.

Exit mobile version