துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய ஜக்தீப் தன்கர், 40 நாட்கள் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கி இருந்த பிறகு, அதை காலி செய்து, இந்திய தேசிய லோக் தள கட்சியின் தலைவர் அபய் சவுதாலாவுக்கு சொந்தமான டில்லி சத்தார்பூர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் குடியேறினார்.
ராஜினாமா
ஜக்தீப் தன்கர், கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நல காரணத்தை சுட்டிக்காட்டி ஜனாதிபதிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார். ஆனால் மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதலே அவரை ராஜினாமா செய்யத் தூண்டியது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
அரசு விதிகளின்படி முன்னாள் துணை ஜனாதிபதிக்கான அதிகாரப்பூர்வ பங்களா ஒதுக்கப்பட்டிருந்தாலும், அதற்கு குடியேறுவது குறித்து தன்கர் எந்த தகவலையும் இதுவரை அளிக்கவில்லை. கடந்த வாரம் அவர், ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கான ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்தார்.
பதவி விலகிய பிறகு அவர் வெளியில் அதிகம் காணப்படாமல், துணை ஜனாதிபதி இல்லத்திலேயே நடைபயிற்சி, நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்தித்தல் போன்றவற்றில் ஈடுபட்டார். இன்று காலை அவர் ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனைக்கு சென்று பல் பரிசோதனை செய்துவிட்டு வந்தார்.
குடியேற்றம்
இந்நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி அவர் அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார். அவரின் தனிப்பட்ட பொருட்கள் அனைத்தும் முன்னதாகவே சத்தார்பூர் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன.
அபய் சவுதாலா கூறுகையில்: “எங்களுக்கு குடும்ப உறவு உள்ளது. அவர் என்னிடம் வீடு கேட்டதில்லை. நான் தான் தானாக வழங்கினேன்” என்றார்.
தன்கர் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் தேஜ கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
இண்டி கூட்டணி சார்பில் ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.