கொங்கு மண்டல ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஜாக்பாட்: வால்மார்ட் மூலம் உலகச்சந்தையை ஆள கோவை ஜாம்பவான்கள் வியூகம்!

தொழில் நகரமான கோயம்புத்தூரில், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புடன் (FIEO) இணைந்து வால்மார்ட் மார்க்கெட்பிளேஸ் நடத்திய ‘வால்மார்ட் குரோத் சம்மிட்: இந்தியா செல்லர் டே’ என்ற பிரம்மாண்ட வளர்ச்சி மாநாடு, தென்னிந்திய சிறு மற்றும் குறு ஏற்றுமதியாளர்களின் வர்த்தக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. திருப்பூர், கரூர் மற்றும் கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலம், சுமார் 35.3 லட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் கொண்டு, ஆண்டுக்கு ரூ. 45,000 கோடி மதிப்பிலான ஜவுளி ஏற்றுமதியைச் செய்து வரும் வேளையில், இந்த நிறுவனங்கள் இடைத்தரகர்களின்றி நேரடியாக அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் தடம் பதிப்பதற்கான நுழைவுச்சீட்டாக இந்த மாநாடு அமைந்தது. ‘ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒரு ஏற்றுமதி மையமாக மாற்ற வேண்டும்’ என்ற ஒன்றிய அரசின் கனவுத் திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, உள்ளூர் தயாரிப்புகளை உலகளாவிய பிராண்டுகளாக மாற்றுவதற்கான டிஜிட்டல் வழிமுறைகள் குறித்து இதில் விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் (DGFT) இணை இயக்குனர் ஆனந்த் மோகன் மிஸ்ரா, இந்தியாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த, மாவட்ட அளவிலான உற்பத்தியாளர்களை ஆன்லைன் வணிகத்தில் ஈடுபடுத்துவது காலத்தின் கட்டாயம் என்று வலியுறுத்தினார். வால்மார்ட் போன்ற உலகளாவிய ஜாம்பவான்கள் வழங்கும் தளங்கள், இந்திய நிறுவனங்களுக்குச் சர்வதேசப் போட்டித்தன்மையைச் சமாளிக்கத் தேவையான நவீன தொழில்நுட்பம் மற்றும் சந்தை உத்திகளைக் கற்றுக்கொடுக்கின்றன என்றும், இதன் மூலம் ‘மேக் இன் இந்தியா’ தயாரிப்புகள் உலகெங்கும் தடையின்றிச் சென்றடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச விதிமுறைகள், சரக்குப் போக்குவரத்து மேலாண்மை (Logistics) மற்றும் அமெரிக்க நுகர்வோரின் மனநிலைக்கேற்ப பொருட்களை வடிவமைத்தல் போன்ற நுணுக்கமான விஷயங்கள் குறித்து இம்மாநாட்டில் நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்திய ஏற்றுமதி நிறுவன கூட்டமைப்பின் தென் மண்டலத் தலைவர் பி. கோபாலகிருஷ்ணன் பேசுகையில், உலகம் முழுவதும் வர்த்தகம் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், கோயம்புத்தூர் ஏற்றுமதியாளர்கள் தங்களின் பாரம்பரிய வணிக முறையிலிருந்து மாறி, இதுபோன்ற ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்திக் கொள்வது மிக அவசியம் என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய வால்மார்ட் இந்தியாவின் குறுக்கு எல்லை வர்த்தகப் பிரிவு (Cross Border Trade) இயக்குனர் ஆஷின் மேத்யூ, இந்தியாவின் மிகச்சிறந்த ஜவுளி மற்றும் உற்பத்தி மையமாகத் திகழும் கோயம்புத்தூரில் உள்ள அபரிமிதமான திறமைகளைத் தங்களது மார்க்கெட்பிளேஸ் வழியாக உலகிற்கு அறிமுகப்படுத்துவதே முதன்மை நோக்கம் என்று தெரிவித்தார். இந்த மாநாட்டின் மூலம், உள்ளூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் இனி சர்வதேசச் சந்தையின் தேவைகளை நேரடியாக அறிந்து, தங்களின் வணிகத்தை உலகளாவிய அளவில் விரிவுபடுத்துவதற்கான நடைமுறைச் சாத்தியங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version