மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர்பான வருமானவரி வழக்கில், அவரது சட்டப்பூர்வ வாரிசான ஜெ. தீபா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிராக நிலுவையில் இருந்த வருமானவரி தொகையை வசூலிக்கும் பொருட்டு, வருமானவரி துறை முதலில் 36 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ. தீபாவிடம் அந்த தொகையை வசூலிக்கத் திட்டமிட்டது.
இந்த நோட்டீசை எதிர்த்து தீபா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி சி. சரவணன் விசாரித்தார்.
வழக்கில், வருமானவரி துறை சார்பில் 36 கோடி ரூபாய் வரி தொகை பின்னர் திருத்தி 13 கோடியாகக் குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, பழைய 36 கோடி நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு அர்த்தமில்லை எனக் கூறி, அதை தள்ளுபடி செய்தார்.
மேலும், சட்டப்படி தேவையான மாற்று நிவாரண வழிகளைத் தேடுவதற்கான உரிமை ஜெ. தீபாவுக்கு உள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.