“நேர்மையாக இருந்ததற்காகவே இவ்வளவு சிக்கல்கள் எனக்கு வந்திருக்கின்றன,” என்று வாக்குவாதம் செய்கிறார் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசன். அவரது அரசு ஜீப் மாவட்ட காவல் துறையால் பறிக்கப்பட்டதாகவும், தன்னை திட்டமிட்டு வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
2023 நவம்பர் மாதம் முதல் மயிலாடுதுறையில் பணியாற்றி வரும் சுந்தரேசன், சட்டவிரோத சாராயம் மற்றும் மது கடத்தலை கட்டுப்படுத்துவதில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 1,200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 700 பேர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. அதோடு, அனுமதியின்றி இயங்கிய 23 டாஸ்மாக் கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
வாகனம் பறிப்பு விவகாரம்
சமீபத்தில், சுற்றுப்பாதுகாப்புக்காக அமைச்சர் மெய்யநாதன் வருகைக்கு முன் சுந்தரேசனின் அரசு வாகனத்தை மாவட்ட காவல்துறை கேட்டு, அவரால் மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் வெளியூருக்கு பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. பணிமுடிவில் மீண்டும் மாவட்டத்துக்கு வந்தபின்பும் அவரது வாகனம் திருப்பி வழங்கப்படவில்லை.
வாகன வசதி இல்லாத காரணத்தால், சுந்தரேசன் பல நாட்களாக இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றதுடன், சமீபத்தில் நடந்து அலுவலகம் சென்ற வீடியோவும் வெளியாகி வைரலானது.
தோல்விகள், மனவலி
“மறைமுக உத்தரவு இல்லாமல் வாகனம் வெளியே அனுப்ப முடியாது என்பதற்காக, அதை வழங்க மறுத்தேன். அதன் பிறகு என்னை திடீரென வெளியூர் பாதுகாப்பு பணிக்கு அனுப்பிவைத்தனர். மீண்டும் வந்த பிறகு வாகனம் கேட்டபோது, ‘வண்டியில் தடை இருக்கலாம், பார்த்துக்கொள்ளுங்கள்’ என ஒப்புக்கொடுத்தேன். ஆனால் இன்று வரை அந்த வாகனம் தரப்படவில்லை,” என அவர் தெரிவித்தார்.
அதிகாரப்பூர்வ ஆதரவும் இல்லாத நிலையிலும், சாராயம் கடத்தலை தடுக்க சிறந்த முறையில் பணியாற்றி வருவதாகவும், அதனால் அரசியல்சார்ந்த சிலருக்கும் அதிகாரிகளுக்கும் வருமான பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
“வளைந்து கொடு.. இல்லையெனில் உடைத்துவிடுவார்கள் !”
“எஸ்.பி. என்னை மைக்கில் அழைத்து, ‘வளைந்து கொடுங்கள், இல்லையென்றால் உடைத்துவிடுவார்கள்’ என்றார். இது ஒரு அதிகாரிக்கு சொல்வதா? நான் பணம் வாங்கும் அதிகாரி கிடையாது. மனித உரிமை ஆணையத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றியவன் நான். நேர்மையோடு தான் செயல்பட்டேன்,” என சுந்தரேசன் கூறினார்.
அலுவலக நிலைமையும் மோசம்
அவரது அலுவலகத்தில் கூட அடிப்படை வசதிகள் இல்லை என்று அவர் தெரிவிக்கிறார். “கழிப்பறை கூட இல்லை. ஒரு எஸ்.ஐ. தனது வீட்டில் இருந்த பழைய ஏ.சி.யை எனக்கு கொடுத்தார். இத்தகைய சூழ்நிலையில் வேலை செய்வது மிகவும் கடினமாக உள்ளது,” என்றார்.
மேலும், “எனது மீது தொடர்ந்து ஒடுக்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான காரணம், நான் மனித உரிமை ஆணையத்தில் அஸ்ரா கார்க் ஆட்கள் மீது புகார் கொடுத்ததுதான்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.