“வேலியே பயிரை மேய்ந்தது போல சம்பவம்” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருப்பது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகள் வெளியிட்ட காணொளியில், ஆசிரியர்கள் குடித்துவிட்டு வருவதோடு தவறான முறையில் சீண்டி, பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், பள்ளியில் புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததோடு, செய்முறைத் தேர்வு மதிப்பெண்களையும் குறைத்துவிடுவதாக மாணவிகள் பதிவில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“வேலியே பயிரை மேய்ந்தது போல, அரசுப் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாணவிகள் தைரியமாக புகார் அளிக்கக்கூட சூழல் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால், ஏழை எளிய மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது” என அவர் கூறியுள்ளார்.

மேலும், “அரசுப் பள்ளிகளில் கல்வி தரம் குறைவாக இருக்கிறது என்ற எண்ணமே பொதுமக்களிடம் நிலவுகின்ற நிலையில், இப்போது பாதுகாப்பு கூட இல்லையெனும் கருத்து உருவாகும் அபாயம் உள்ளது. ‘அப்பா’ என்ற பட்டத்தை உரிமை கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கை எடுத்து, கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி வழங்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version