2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் சூழல் சூடுபிடித்து வரும் நிலையில், துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அதிமுகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் நேரடியாக தாக்கியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் நேற்று தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய உதயநிதி, இன்று செங்கல்பட்டு சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்சில் செல்வார் என்று நான் சொல்லவில்லை. மனிதாபிமானம் உள்ள ஒருவராக, அந்த வார்த்தைகளை பயன்படுத்தமாட்டேன். ஆனால் அதிமுக கட்சி ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில்தான் உள்ளது என்று கூறினேன். அந்த நிலையில் காப்பாற்றும் மருத்துவராக முதல்வர் வருவார் என்றும் குறிப்பிட்டேன்.
எந்தக் கட்சித் தலைவர் கூட்டம் நடத்தினாலும் அவசரத்துக்காக ஆம்புலன்ஸ் வாகனம் வருவது வழக்கமே. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதை தவறாக புரிந்து கடுமையாக விமர்சித்துள்ளார். உண்மையான தலைவர் என்றால், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடுபவர் தான்.
எடப்பாடி பழனிசாமியால் பாஜகவிடமிருந்து அதிமுகவை காப்பாற்ற முடியவில்லை. எனவே, அவர் நிரந்தர பொதுச்செயலாளராகவே தொடர வேண்டும். அதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் செய்யக்கூடிய ஒரே நல்ல காரியம். அதிமுகவினர் இதை ஏற்றுக்கொள்வார்களா தெரியவில்லை. ஆனால் நான் முன்மொழிகிறேன் – எடப்பாடிதான் நிரந்தர பொதுச்செயலாளர்” என உதயநிதி கூறினார்.
மேலும், எடப்பாடியின் தேர்தல் பயணத்தை சாடிய அவர்,
“முதல் ரவுண்டு சுற்றுப்பயணத்தில் பாதி கூட்டணி கட்சிகள் காணாமல் போய்விட்டன. இப்போது இரண்டாவது சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். திரும்பும்போது அவர் ஒருவரே பஸ்சில் வந்தாலும் வந்துவிடுவார் போல. டிரைவர் கூட இருப்பாரா என்றே தெரியவில்லை” என்று கடுமையாக தாக்கினார்.