பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை அவதூறாக திட்டிய காங்கிரஸ் தொண்டர்களின் செயலை, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கண்டித்து தெரிவித்துள்ளார்.
பீஹாரில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியின் போது, சில தொண்டர்கள் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரீக வார்த்தைகளை பயன்படுத்தியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த மேடையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவத்துக்கெதிராக பாஜக பாட்னா போலீசில் புகார் அளித்து, காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளது.
இதுகுறித்து தனது கருத்தை வெளியிட்ட ஓவைசி, “எதிர்க்கலாம், விமர்சிக்கலாம், எவ்வளவு வேண்டுமானாலும் கண்டிக்கலாம். ஆனால் கண்ணியத்தின் எல்லையைத் தாண்டி பேசினால் அது தவறு. விவாதம் கொச்சையாக மாறும். பிரதமரை விமர்சிக்கலாம், ஆனால் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. கண்ணியமான சொற்களையே பயன்படுத்த வேண்டும். கண்ணியத்தின் எல்லையை மீறுவது தவறு, அதைச் செய்யக் கூடாது. இதை நினைவில் கொள்ள வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.