விழுப்புரம் : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாக கூறப்படுவது பொய்யான தகவல் என தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நிருபர்களை சந்தித்த அவர்,
“சில விஷமிகள் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். நாளை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்கிறேன். திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும். முக்கியமான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பொதுக்குழுவில் குறைந்தது 4 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்” என்று தெரிவித்தார்.
அவர் மேலும்,
“நேற்று தைலாபுரம் இல்லத்திற்கு அன்புமணி வந்தார். அவர் வணக்கம் சொன்னார்; நானும் வணக்கம் சொன்னேன். அதற்கு அப்பாற்பட்ட எந்த உரையாடலும் நடைபெறவில்லை. அன்புமணி என்னிடம் ஆசீர்வாதம் வாங்கவில்லை. அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாக கூறுவது முற்றிலும் பொய்” என்றும் கூறினார்.
இதற்கிடையில், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் ராமதாஸ்,
“புதுச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா அரங்கில் நாளை திட்டமிட்டபடி பாமக சிறப்பு பொதுக்குழு நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
