திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் மலைப்பகுதியில், குளிர்காலத்தை (நவம்பர், டிசம்பர், ஜனவரி) அனுபவிப்பதற்காக இஸ்ரேல் நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது வட்டக்கானல் பகுதியில் தொடங்கியுள்ளது. வழக்கமாக, இந்தப் பகுதிகளில் தங்கி ஓய்வெடுக்கும் அவர்கள், இதமான காலநிலையை ரசித்து, அப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டு மகிழ்வது வழக்கம்.
வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்றாகக் கூடி ‘சபாத்’ எனப்படும் சிறப்பு வழிபாட்டை நடத்துவது அவர்களின் வழக்கம். ஆனால், இந்தப் பழக்கம் கடந்த காலங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டது. குறிப்பாக, 2016-ஆம் ஆண்டு காவல்துறை விசாரணையில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வட்டக்கானலில் கூடும் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கத் திட்டமிட்டது தெரியவந்தது.
இதன் காரணமாக, அப்போதிலிருந்து இன்று வரை, வட்டக்கானல் பகுதிக்கு வரும் இஸ்ரேல் நாட்டுப் பயணிகளின் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் காவல்துறையினர் துப்பாக்கி ஏந்தி தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தொடங்கியுள்ள நிலையில், கொடைக்கானல் காவல் துறையினர் வட்டக்கானல் பகுதியில் தங்கள் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கியமாக, வட்டக்கானல் நுழைவுவாயில் சோதனைச் சாவடியில் தற்போது காவல்துறையினர் யாரும் பாதுகாப்புப் பணியில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், யார் வேண்டுமானாலும் எந்தவிதச் சோதனையும் இன்றி உள்ளே சென்று வரக்கூடிய நிலை உள்ளது.
எனவே, கொடைக்கானல் காவல்துறையினர் உடனடியாக சோதனைச் சாவடியில் பணியமர்த்தப்பட்டு, அனைத்து வாகனங்களையும் தீவிரமாகச் சோதனை செய்த பின்னரே வட்டக்கானல் பகுதிக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் இஸ்ரேல் நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளின் வருகையானது வட்டக்கானல் பகுதியில் உள்ள உணவு விடுதிகள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த மூன்று மாத குளிர்காலமும் இவர்களுக்கு நல்ல வருமானத்தைக் கொடுக்கும் சீசன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகையால் இப்பகுதியில் உள்ள உணவு விடுதி மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது…
















