பலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 34 பொதுமக்கள் உயிரிழந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து “தொழில்நுட்பக் கோளாறு” தான் காரணம் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை விளக்கம் அளித்துள்ளது
2023 அக்டோபர் மாதத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரால் உருவான அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, காசா பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பொருட்களை அப்பகுதிக்குள் அனுப்பும் பொறுப்பை, காசா மனிதாபிமான அறக்கட்டளை மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வழங்கியுள்ளன. இதனையடுத்து, நாள்தோறும் சுமார் ஐந்து லாரிகளில் உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிவாரணப் பொருட்கள் கிடைக்கும் பகுதிகளில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டுவிடுகின்றனர். இதையடுத்து, இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் அந்த இடங்களை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில், நுசைரத் அகதிகள் முகாமிலுள்ள தண்ணீர் விநியோக மையத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 20 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பலியானோர் இடையில், சந்தை பகுதியிலும் தண்ணீர் விநியோக மையத்திலும் இருந்தவர்கள் அடங்குகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம், “இது ஒரு தொழில்நுட்ப தவறால் ஏற்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது,” எனக் கூறியுள்ளது.