தியான்ஜின்: சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நட்பு பாவனையில் ஈடுபட்ட காட்சி கவனம் பெற்றது. இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனிமைப்படுத்தப்பட்டவர் போல நின்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியா பாகிஸ்தானுடன் தொடர்புகளை முற்றிலும் துண்டித்தது. அமெரிக்கா இதற்கிடையில் இந்தியா–பாகிஸ்தான் உறவில் தலையிட முயன்றபோதும், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறது. அதிபர் டிரம்ப், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்தது இருநாடுகளுக்கிடையேயான பதற்றத்தை அதிகரித்தது.
இந்நிலையில், ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி, புடின் மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோருடன் நட்பு காட்டி உரையாடினார். ரஷ்ய அதிபர் புடின் பிரதமரை அன்புடன் அணைத்துக் கொண்டு, இந்தியாவுடன் இணைந்து செயல்பட விருப்பம் இருப்பதை வெளிப்படுத்தினார்.
அதே சமயம், அரங்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனியாக நின்ற காட்சி கேமராவில் பதிவாகி, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது, இந்தியாவின் சர்வதேச மேடையில் உயர்ந்த செல்வாக்கையும், பாகிஸ்தானின் தனிமைப்படுத்தப்பட்ட நிலையையும் வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
