திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டதைக் கண்டித்தும், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைப்பை விமர்சித்தும் காங்கிரஸ் கட்சியினர் வாயில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கிராமப்புற ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலையை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர், மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்தைக் கையில் ஏந்தியபடி, திட்டத்தின் பெயரை மாற்றுவது என்பது நாளடைவில் இத்திட்டத்தையே மத்திய அரசு முடக்கும் எண்ணத்தோடு செயல்படுவதைக் காட்டுகிறது என ஆக்ரோஷமாக முழக்கமிட்டனர்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இத்திட்டத்திற்காக ஒரு லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போதுள்ள பாஜக அரசு அதனை வெறும் 63 ஆயிரம் கோடியாகக் குறைத்து, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளைத் தடுத்து, ஏழை மக்களின் வயிற்றிலடிப்பதை மத்திய அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் தரையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும், தொடர் போராட்டங்களுக்கும் மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் உரிய மதிப்பளிக்கவில்லை எனில், அடுத்தகட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.














