மதுரை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபம் கட்டக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, “ராஜராஜ சோழன் அங்குதான் அடக்கம் செய்யப்பட்டார் என்பதற்கான ஆதாரம் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பியதுடன், ஆதாரமில்லாததால் மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டது.
தஞ்சை அரண்பணி அறக்கட்டளையின் செயலாளர் தியாகராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளது. அங்கு மாமன்னருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு மணிமண்டபம் கட்ட உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின்போது, உடையாளூரில் மனுதாரர் குறிப்பிட்டுள்ள இடம் கும்பகோணம் அருள்மிகு கைலாசநாதர் கோயிலுக்குச் சொந்தமானது என்று அதன் செயல் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், “அந்த இடத்தில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்டதற்கான எவ்விதமான ஆவணங்களும் இல்லை” என்றும் செயல் அலுவலர் தரப்பில் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரிடம், “ராஜராஜ சோழன் அங்குதான் புதைக்கப்பட்டார் என்று மனுதாரர் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கக்கூடிய ஆவணங்கள் எதையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை” என்று குறிப்பிட்டனர்.
ஆவணங்கள் இல்லாததைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள், “ஆதாரங்கள் இல்லாத நிலையில், மனுதாரர் கோரும் நிவாரணத்தை (மணிமண்டபம் கட்ட உத்தரவிட) வழங்க இயலாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். அதே சமயம், “மறைந்த அரசர் ராஜராஜ சோழன் அங்குதான் அடக்கம் செய்யப்பட்டார் என்பதற்கான ஆவணங்களை மனுதாரர் எதிர்காலத்தில் சமர்ப்பித்தாலும், அது தொடர்பாக கொள்கை முடிவெடுக்க வேண்டியது தமிழக அரசே. நீதிமன்றம் அதில் தலையிட இயலாது” என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டனர். இதையடுத்து, மணிமண்டபம் கட்டக் கோரிய இந்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்து உத்தரவிட்டது.














