தூத்துக்குடி கடலுக்கடியில் புதையல் ரகசியம்?  மத்திய ஆய்வு மையங்களுக்குக் கலெக்டர் கடிதம்!

மறைக்கப்பட்ட புதையல்கள் மற்றும் தொலைந்துபோன நகரங்கள் குறித்த கதைகள் எப்போதுமே சிலிர்ப்பை ஏற்படுத்தும் நிலையில், தூத்துக்குடி அருகே கடலுக்கு அடியில் தொன்மை எச்சங்கள் மற்றும் புதையல்கள் இருக்கலாம் என்று தொல்லியல் ஆர்வலர் ஒருவர் அளித்த அதிர்ச்சி தகவலைத் தொடர்ந்து, அதன் உண்மையை அறிய, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அவர்கள் கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் மற்றும் புவியியல் ஆய்வு மையங்களுக்கு (ZSI & GSI) உடனடியாகக் கடிதம் அனுப்பியிருப்பது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் என்பவர், பல ஆண்டுகளாகப் பல்வேறு பகுதிகளில் மேற்பரப்பு கள ஆய்வுகளை நடத்தி, அப்பகுதிகளின் தொன்மைகளை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர் தூத்துக்குடி அருகே உள்ள பட்டினமருதூர் மற்றும் பனையூர் உள்ளிட்ட கிராமங்களில் மேற்பரப்பு ஆய்வுகளை மேற்கொண்டு, அங்கு கிடைத்த தொன்மையான பொருட்கள் குறித்த அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையின் தொடர்ச்சியாக, ராஜேஷ் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அவர்களிடம் ஒரு விரிவான மனுவை அளித்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

தூத்துக்குடி – பட்டினமருதூர் (சர்வே எண்கள் 200, 203, 204) மற்றும் தூத்துக்குடி – பனையூர் (குளத்தூர் தெற்கு கிராமம் அணைக்கட்டு, சர்வே எண்கள் 215, 435) ஆகியவற்றின் கீழ் உள்ள பகுதிகளில் நீருக்கு அடியில் கட்டமைப்புகள் இருப்பதை உறுதி செய்ய முடியும். இந்தப் பகுதிகளில் சிப்பிகள், சங்குகள் போன்ற கடல் படிமங்கள் (Fossils) மட்டுமின்றி, மிகப்பெரிய புதையல்களும் (Treasure) மறைந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சாதாரணமாக, இதுபோன்ற தொல்லியல் கண்டுபிடிப்புகள் தொடர்பான மனுக்கள் அரசு அலுவலகங்களில் முடங்கிவிடும் அபாயம் இருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அவர்கள் இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, உடனடியாகச் செயல்படத் தொடங்கினார்.

புதையல் இருக்கலாம் என்ற தொல்லியல் ஆர்வலரின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து உரிய ஆய்வு நடத்தி, உண்மையை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தி, கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் மற்றும் இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் (GSI) இயக்குநர் ஆகியோருக்கு கடந்த நவம்பர் 25-ஆம் தேதி அவர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் அளித்த மனு, ஆய்வு தொடர்பான புகைப்பட ஆல்பம் ஆகியவை அடங்கிய இரண்டு கையேடுகளையும் அந்தக் கடிதத்துடன் இணைத்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆற்றல் மிகுந்த ஓர் இளம் மாவட்ட ஆட்சியரின் முயற்சியால், கடலுக்கடியில் புதையல்கள் குறித்த இந்த மனு தற்போது தேசிய அளவிலான தொல்லியல் மற்றும் புவியியல் ஆய்வு மையங்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் மத்தியக் குழுக்கள் தூத்துக்குடிக்கு வந்து கள ஆய்வைத் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு, அப்பகுதி மக்கள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தூத்துக்குடியின் தொன்மையான கடல்சார் வரலாறு மற்றும் வர்த்தக ரகசியங்கள் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வரலாம் என நம்பப்படுகிறது.

Exit mobile version