ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு மத மோதலை தூண்டிக்கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டிய முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “முதல்வர் ஸ்டாலின் உண்மையில் அனைவருக்குமான முதல்வரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியது : 1920 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தர்கா மற்றும் நெல்லித்தோப்பு பற்றிய எல்லைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை அண்ணாமலை சுட்டிக்காட்டினார். “மலைப்பகுதியின் பெரும்பகுதி கோவிலுக்குச் சொந்தமென தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் திமுக அரசு தீர்ப்பை சிதைக்க முயல்கிறது,” என அவர் குற்றஞ்சாட்டினார்.

அமைச்சர் ரகுபதிக்கு விமர்சனம்

ஐகோர்ட் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பைப் பற்றி தவறான விளக்கம் அளித்து, மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தினார் என அமைச்சர் ரகுபதியை அண்ணாமலை குற்றம் சாட்டினார். “தீபத்தூண் கோவில் சொத்து என்று நீதிமன்றம் கூறியிருக்கையில், செயல் அலுவலர் ஏன் மேல்முறையீடு செய்ய வேண்டும்? திமுக அரசு தூண்டி வைத்ததே தவிர வேறு காரணம் இல்லை,” என்றார்.

நயினார் நாகேந்திரன் மற்றும் எச். ராஜா தீபம் ஏற்றச் சென்ற போது தடுக்கப்பட்டதை சட்டவிரோதமானது என அண்ணாமலை குறிப்பிட்டார்.
144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது மோசமான நடைமுறை என நீதிமன்றமே கண்டித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சிக்கந்தர் மலை பெயர் விவகாரம்

சிக்கந்தர் மலை என பெயர் சூட்டப்பட்டதையும், “ஆடு–கோழி வெட்டுவோம்” என்ற பேச்சையும் அரசு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாக அண்ணாமலை கூறினார்.
“பக்தர்களுக்கு எதிராக மட்டும் அரசு ஈடுபாடு காட்டுகிறது,” என்றார்.

161 கோவில்கள் இடிப்பு விவகாரம் மீண்டும் எழுப்பல்

கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் 161 கோவில்கள் இடிக்கப்பட்டதை அவர் நினைவுபடுத்தினார். “அப்போது நீதிமன்றத்தை நாடாமல், இரவு நேரத்தில் இடித்த அரசு, இன்று தீர்ப்பை மதிக்க மாட்டோம் என பேசுகிறது,” என்றார்.

முதல்வரின் எக்ஸ் பதிவு சர்ச்சை

திருப்பரங்குன்றம் சம்பவத்தையடுத்து முதல்வர் ஸ்டாலின் ‘டேஷ்’ என பதிவு செய்ததை அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார்.
“இது முதல்வர் போடும் பதிவு தானா? இவர் அனைவருக்கும் முதல்வரா அல்லது குறிப்பிட்ட சமுதாயத்துக்கானவரா?” என கேள்வி எழுப்பினார்.

மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பியதாக தகவல்

நீதிமன்ற உத்தரவுகளை மீறியதால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகியுள்ளதாகவும், அதன் விவரமான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

Exit mobile version