மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழகமெங்கும் உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி நிர்ணயம் சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் டி.ஐ.ஜி. தலைமையிலான சிறப்பு குழு, வரி விதிப்பு முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், மதுரை மாநகராட்சியில் உள்ள அசையா சொத்துகளுக்கான சொத்து வரி முறையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்கான அறிக்கையை மாநகராட்சி கமிஷனர் நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், 100 வார்டுகளுக்கும் தனித்தனியாக 100 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், முழுமையான ஆய்வுக்கு இரண்டு கட்டங்களாக 4 மாதங்கள் அவகாசம் தேவைப்படும் என குறிப்பிடப்பட்டது.
இந்த அறிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், “மதுரையைப் போல தமிழகத்தின் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளும் செயல் திட்டம் வகுத்து, ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள சொத்து வரி முறையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.