திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் அமைந்துள்ள தாண்டிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கூடம் நகர் கிராம மக்கள், வனத்துறையின் தொடர் முட்டுக்கட்டைகளால் தங்கள் அடிப்படை உரிமைகளை இழந்து வருவதாகக் கூறி, வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அதிரடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், விவசாயமே இவர்களின் பிரதான வாழ்வாதாரமாக உள்ளது. விளைபொருட்களைச் சந்தைப்படுத்தவும், ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும் இவர்கள் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்ணைக்காடு கிராமத்திற்குச் செல்ல வேண்டிய அவலநிலை நீடிக்கிறது. கரடுமுரடான, சிதலமடைந்த பாதையில் தலைச்சுமையாகவும், நான்கு சக்கர ஜீப்களுக்கு அதிக வாடகை கொடுத்தும் பயணிக்கும் இக்கிராமத்தில், சரியான சாலை வசதி இல்லாத ஒரே காரணத்திற்காக இளைஞர்களுக்குப் பெண் கொடுக்க மறுப்பதால் பலருக்குத் திருமணம் ஆகாத சமூக அவலமும் அரங்கேறி வருகிறது.
மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலையைச் சீரமைக்க லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், சுமார் 4 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் வருவதாகக் கூறி வனத்துறையினர் இந்தப் பணிகளைப் பாதியிலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுமட்டுமன்றி, கடந்த சில தினங்களாக கிராமத்திற்குச் செல்லும் பாதையில் வனத்துறை சார்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, இரும்புத் தடுப்புகள் மூலம் பொதுமக்கள் செல்வதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரேஷன் பொருட்களை வாங்கித் திரும்பிய கிராம மக்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த மக்கள், பொருட்களைச் சாலையிலேயே கொட்டி அமர்ந்து போராட்டத்தில ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் உதவி வனப் பாதுகாவலர் கருப்பையா தங்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி வருவதாகக் கிராம மக்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
வனத்துறையினரின் இந்த வஞ்சிக்கப்படும் செயலைக் கண்டித்து கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி, தங்களின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதியை ஏற்படுத்தித் தராததைக் கண்டித்தும், வனத்துறையின் இரும்புத் தடுப்புகளை அகற்ற வலியுறுத்தியும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, வனத்துறையின் கெடுபிடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சிதலமடைந்த சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கூடம் நகர் கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
