தெஹ்ரான் : மத்திய கிழக்கில் கடந்த ஜூன் 13ஆம் தேதி தொடங்கி, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்த கடுமையான போர் தொடர்ந்து 12 நாட்கள் நீடித்தது. இதைத் தொடர்ந்து, ஜூன் 24ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர்நிறுத்தம் அறிவித்தார்.
இந்நிலையில், போர் நடைபெற்று வந்த நேரத்தில், ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி தளங்களான நடான்ஸ், ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் ஆகியவை மீது அமெரிக்கா பங்கர் பஸ்டர் வகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. இதனால் அந்த அணுசக்தி தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
ஆனால், தொடக்கத்தில் இந்த தகவலை ஈரான் மறுத்தது. ஆனால் தற்போது, முதல் முறையாக, இந்த தளங்கள் அமெரிக்க தாக்குதலால் கடுமையாக சேதமடைந்துள்ளதை ஈரான் அரசு உறுதிபடுத்தியுள்ளது.
ஈரான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய், நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
எங்களது அணுசக்தி கட்டமைப்புகள் பெரிதும் சேதமடைந்துள்ளதை உறுதியாகக் கூறலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் உறுதி செய்யப்பட்டாலும், சம்பந்தப்பட்ட பிற விவரங்களை எதையும் ஈரான் அரசு தற்போது வெளியிடவில்லை.
இதுவரை, ஈரானின் அணுசக்தி தளங்கள் சேதமடைந்ததாக இருந்த செய்திகள் உள்நாட்டிலும், சர்வதேச ஊடகங்களிலும் கருத்து வேறுபாட்டுடன் பேசப்பட்டன. ஆனால் தற்போது, ஈரானே நேரடியாக அத்தகவலை ஒப்புக்கொண்டுள்ளது என்பது முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.