தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனி சென்றிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்நாட்டில் நடைபெற்ற உயர்நிலை முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.7,020 கோடி மதிப்பிலான 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், “ஜெர்மனி பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ரூ.3,819 கோடி மதிப்பிலான 23 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இவை மூலம் மட்டும் 9,000 வேலைவாய்ப்புகள் உருவாகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன உதிரிபாகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் உலகத் தலைசிறந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டை தங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான தளமாகத் தேர்ந்தெடுத்துள்ளன. மொத்தத்தில், ஜெர்மனி பயணத்தின் போது ரூ.7,020 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 15,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும்,” என்று தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியின் டஸல்டார்ஃப் நகரில் முதலமைச்சருக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் இந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு முன் கையெழுத்தான ஒப்பந்தங்கள்
2021 ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் மு.க. ஸ்டாலின் பல முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
2022 – ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: ரூ.6,100 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் (15,000 வேலைவாய்ப்பு).
2023 – சிங்கப்பூர், ஜப்பான்: ரூ.1,342 கோடி ஒப்பந்தங்கள் (2,000 வேலைவாய்ப்பு).
2023 – ஸ்பெயின்: ரூ.3,440 கோடி ஒப்பந்தங்கள்.
2023 – அமெரிக்கா: ரூ.7,616 கோடி ஒப்பந்தங்கள் (11,516 வேலைவாய்ப்பு).
இவ்வாறு, “தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டச் செய்வது” என்ற நோக்கத்துடன் முதலமைச்சர் தொடர்ந்து தொழில் முதலீட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
