ஆப்கானிஸ்தானில் அதிகாரம் செலுத்தி வரும் தலிபான் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் இருவருக்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) வெளியிட்டுள்ள கைது வாரண்டுகள், உலக அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.
ICC தனது வரலாற்றிலேயே முதல் முறையாக, பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் LGBTQ சமூகத்தினருக்கு எதிராக புரியப்பட்ட மனித உரிமை மீறல்களை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என அங்கீகரித்து, தலிபான் தலைவர்களுக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்துள்ளது.
முக்கிய குற்றவாளிகள் யார் ?
ஹைபதுல்லா அகுன்சாதா – தலிபானின் உச்ச தலைவர்
அப்துல் ஹகீம் ஹக்கானி – தலிபானின் தலைமை நீதிபதி
இவர்கள் இருவரும் 2021 ஆகஸ்ட் 15ம் தேதி தலிபான் ஆட்சிக்குவந்த நாளிலிருந்து ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் உள்ளவர்கள். இவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இடம்பெற்ற தனிமனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்க வேண்டும் என ICC வலியுறுத்தியுள்ளது.
ICC குற்றச்சாட்டுகள் : மனித உரிமை மீறல்கள்
ICC வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பின்வருமாறு :
பாலின அடிப்படையிலான துன்புறுத்தல்
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
கல்வி, கருத்து, மத சுதந்திரம் மறுப்பு
தனியுரிமை, குடும்ப வாழ்க்கை மீறல்
அரசியல் எதிரிகள் எனக் கருதி வழிமுறைகளை மேற்கொள்வது
LGBTQ சமூகத்தினருக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்
இவற்றில் பல குற்றச்சாட்டுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சட்டங்களை முற்றிலும் மீறுவதாகக் கருதப்படுகிறது.
விசாரணை ஆதாரங்கள் & நிபுணர்கள்
ICC வழக்குரைஞர் குழு பல்துறை ஆதாரங்களை சேகரித்துள்ளது:
சாட்சியங்கள், அதிகார ஆணைகள்
தடயவியல் மற்றும் ஆடியோ-விசுவல் ஆதாரங்கள்
தலிபான் உறுப்பினர்களின் நேரடி தகவல்கள்
பாலியல், உளவியல், சமூக நிபுணர்களின் ஆய்வுகள்
தலிபானின் பதிலடி
தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் கூறுகையில்,
“நாங்கள் எந்த வெளிநாட்டு நீதிமன்றத்தையும் அங்கீகரிக்கவில்லை. இவை இஸ்லாத்துக்கு எதிரான திட்டமிட்ட நடவடிக்கைகள்.” எனக் கண்டித்தார்.
சர்வதேச வரவேற்பு
மனித உரிமை அமைப்புகள், குறிப்பாக ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச், இந்த நடவடிக்கையை வரவேற்கின்றன. பெண்கள் மற்றும் LGBTQ சமூகத்தினருக்கான சர்வதேச நீதிக்கான இது ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.