மதுரை :
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது மதுரை ஐகோர்ட்.
திருச்சி மாவட்ட டிஐஜியாக உள்ள வருண்குமார் அளித்த புகாரின் படி, சீமான் தூண்டுதலால் அவரது கட்சி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் தமக்கு மற்றும் தங்கள் குடும்பத்தினருக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து, சீமான் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு, அது தற்போது திருச்சி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அண்மையில் இந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜரானதும், விளக்கம் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறித்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று (ஜூலை 1) விசாரித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
