வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை அடையாறு ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலையிலேயே நேரில் சென்று பார்வையிட்டார்.
டிராக், டி-ஷர்ட்டுடன் தளத்துக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் பகுதியில் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். பணிகள் எவ்வாறு முன்னேறுகின்றன, எங்கு தடைகள் உள்ளன என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், “மழைக்கு முன் முகத்துவாரப் பகுதியை விரிவாக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
அடையாறு ஆற்றை சீரமைப்பதற்கான பணிகள், சென்னை வெள்ளத்தடுப்பு அறக்கட்டளையின் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மணிமங்கலம் அருகே தொடங்கி பட்டினப்பாக்கம் வரை 42.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ஆற்றில், ஏரிகளின் உபரி நீர் மட்டுமின்றி நகரின் கழிவுநீரும் கலப்பதால் தூர்வாரும் பணிகள் அவசரத்துடன் முன்னெடுக்கப்படுகின்றன.
மழைக்காலத்தில் நீர் தேக்கம் ஏற்படாமல், ஆற்றின் நீரோட்டம் தடையின்றி செல்லும் வகையில் அரசு மேற்கொண்டிருக்கும் இந்த பணிகளை ஸ்டாலின் நேரில் பார்வையிட்டது, அதிகாரிகள் மத்தியில் தீவிரத்தை கூட்டியுள்ளது.
 
			















