திருப்பதி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் 6E 6591, தொழில்நுட்ப கோளாறால் பறப்பதற்குப் பிறகு சுமார் 40 நிமிடங்கள் வானில் வட்டமிட்டது. பின்னர் முன்னெச்சரிக்கையாக விமானம் திருப்பதியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. சம்பவம் நடந்தது ஜூலை 20ஆம் தேதி இரவு 7.55 மணியளவில்.
இதையடுத்து வெளியான அறிக்கையில், “இண்டிகோ 6E 6591 விமானத்தில் சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானிகள் திருப்பி விமானத்தை பத்திரமாக தரையிறக்க முடிவு செய்தனர். விமானம் மீண்டும் இயக்கப்படுவதற்கு முன் அனைத்துத் தேவையான சோதனைகளும் மேற்கொள்ளப்படும்,” என இண்டிகோ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அத்துடன், பயணிகளுக்கு சிரமம் ஏற்படாதவாறு சிற்றுண்டி, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கோ அல்லது முழு பணத்தையும் திரும்பப் பெறுவதற்கோ பயணிகள் விருப்பத்துக்கு ஏற்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்குமுன்னதாக, ஜூலை 17ஆம் தேதி டெல்லியில் இருந்து இம்பாலுக்கு புறப்பட்ட 6E 5118 விமானமும், பறப்புக்கு பின்னர் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், டெல்லிக்கு திரும்பி பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
அதேபோல், 6E 6271 என்ற விமானம், டெல்லியில் இருந்து கோவா நோக்கிப் புறப்பட்டபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, மும்பை வழியாக விமானம் திருப்பி விடப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் அது இரவு 9.52 மணிக்கு அவசரமாக தரையிறங்கியது.
அடுத்தடுத்து இண்டிகோ விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் தொடர்பாக, விமானத்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகள் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த சம்பவங்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.