ஈட்டி எறிதலில் இந்தியாவின் பெருமையை உலகிற்கு எடுத்துச் செல்லும் நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது.
டில்லியில் உள்ள சவுத் பிளாக் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி கலந்து கொண்டு நீரஜ் சாதனையை பாராட்டினர்.
நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தில் 2016 ஆம் ஆண்டு ஜூனியர் கமிஷன்டு அதிகாரியாக சேர்ந்தார்.
அவருக்கு முன்பே பத்மஸ்ரீ, அர்ஜுனா விருது, பரம் விஷிஷ்ட சேவா பதக்கம், விஷிஷ்ட சேவா பதக்கம் உள்ளிட்ட பல தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம், 2023 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு மற்றும் டயமண்ட் லீக் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
2025 இல் ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் எறிந்து இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனை பதிவு செய்தார்.
ராஜ்நாத் சிங்கின் பாராட்டு :
ராஜ்நாத் சிங் கூறியதாவது, “நீரஜ் சோப்ரா ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தேசிய பெருமை ஆகியவற்றின் உயிரோட்டமாக விளங்குகிறார். அவருடைய சாதனைகள் வருங்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும்” என தெரிவித்தார்.
நீரஜ் சோப்ராவின் சாதனைகள் இந்திய விளையாட்டில் புதிய வரலாற்றை உருவாக்கி, இளம் வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக விளங்குகின்றன.
