“ICC கனவு அணியில் இந்தியாவின் 3 ராணிகள் !”

2025ம் ஆண்டு நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சிறந்த அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது.

இப்போட்டித் தொடரில் வரலாற்றை படைத்த இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக உலகக் கோப்பை கோப்பையை கைப்பற்றியது. 47 ஆண்டுகளாகக் காத்திருந்த இந்திய மகளிர் அணியின் கனவு இவ்வாண்டு நனவாகியது.

இந்த பெருமைமிகு தொடருக்கான “ICC Dream Team” பட்டியலில் மூன்று இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, முக்கிய ஆட்டத்தில் தாக்கத்துடன் விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், மற்றும் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகியாகத் தேர்வான தீப்தி ஷர்மா ஆகியோர் அந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.

கனவு அணிக்குத் தென்னாப்பிரிக்க அணித் தலைவர் லாரா வோல்வோர்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தொடக்க ஜோடியில் ஸ்மிருதி மந்தனாவும், லாரா வோல்வோர்டும் இணைந்துள்ளனர். ஒன் டவுன் வீராங்கனையாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவாகியுள்ளார்.

மத்திய வரிசையில் தென்னாப்பிரிக்காவின் மரிசான் காப், நாடின் டி கிளார்க், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்ட்னர், அன்னபெல் சதர்லேண்ட், இந்தியாவின் தீப்தி ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விக்கெட் கீப்பராக பாகிஸ்தானைச் சேர்ந்த சித்ரா நவாஸ் தேர்வாகியுள்ளார். சுழற்பந்துவீச்சு பிரிவில் ஆஸ்திரேலியாவின் அலனா கிங் மற்றும் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ICC மகளிர் கனவு அணி 2025:
ஸ்மிருதி மந்தனா, லாரா வோல்வோர்ட் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் காப், ஆஷ் கார்ட்னர், தீப்தி ஷர்மா, அன்னாபெல் சதர்லேண்ட், நாடின் டி கிளார்க், சித்ரா நவாஸ் (விக்கெட் கீப்பர்), அலனா கிங், சோபி எக்லெஸ்டோன்.

Exit mobile version