அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை : மத்திய அரசு உதவியை நாடும் பெற்றோர் !

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு இந்திய இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான முகமது நிஜாமுதீன், 2016ஆம் ஆண்டு புளோரிடா மாநிலத்தில் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றார். கல்வி முடித்த பின் அங்கு ஒரு நிறுவனத்தில் மென்பொருள் நிபுணராக பணியில் சேர்ந்த அவர், பதவி உயர்வுக்குப் பின் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்திருந்தார்.

சமீபத்தில் அறைத் தோழருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றதாகவும், அப்போது ஏற்பட்ட சூழலில் நிஜாமுதீன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் தற்போது கலிபோர்னியா சாண்டா கிளாராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

நிஜாமுதீனின் தந்தை ஹஸ்னுதீன், “என் மகனின் மரணம் குறித்து எங்களிடம் தெளிவான தகவல் இல்லை. அவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தலையிட வேண்டும்” என வெளிநாட்டுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ இந்திய துணைத் தூதரகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, உடலை தாயகத்துக்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

Exit mobile version