நிதி முடிவுகளில் நிமிர்ந்து நிற்கும் இந்தியப் பெண்கள்: டிபிஎஸ் வங்கி ஆய்வில் வெளிவந்த அதிரடித் தகவல்கள்!

சர்வதேச மகளிர் தினத்தை (2026) முன்னிட்டு, இந்தியப் பெண்களின் நிதி மேலாண்மை மற்றும் முதலீட்டுப் பழக்கவழக்கங்கள் குறித்த மிக முக்கிய ஆய்வு அறிக்கையை டிபிஎஸ் (DBS) வங்கி வெளியிட்டுள்ளது. டெலாய்ட் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த விரிவான ஆய்வில், இந்தியா முழுவதும் உள்ள 1,342 பெண்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதில் தென்னிந்தியாவிலிருந்து அதிகபட்சமாக 36 சதவீதம் பேரும், மேற்கில் 27 சதவீதம், வடக்கில் 23 சதவீதம் மற்றும் கிழக்கில் 14 சதவீதம் பேரும் பங்கேற்றனர். பெண் தொழில்முனைவோர், பெரும் சொத்து மதிப்புள்ள பெண்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் பெண்கள் எனப் பல தரப்பினரின் நிதிசார்ந்த மனநிலையை இந்த அறிக்கை பிரதிபலிக்கிறது.

இந்த ஆய்வின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், பெண்கள் மற்றவர்களைச் சார்ந்து இருக்காமல் தங்களின் நிதி முடிவுகளைத் தாங்களே சுயமாக எடுப்பது கடந்த காலங்களை விடப் பெருமளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெண் தொழில்முனைவோரில் 69 சதவீதம் பேர் நிதி விவகாரங்களில் சுயமாக முடிவெடுக்கின்றனர். இந்த விழிப்புணர்வு கிராமப்புறங்களிலும் ஊடுருவியுள்ளது என்பதற்குச் சான்றாக, அங்குள்ள பெண்களில் 60 சதவீதம் பேர் நிதி சுதந்திரத்துடன் செயல்படுவது தெரியவந்துள்ளது. அனுபவமும் வயதும் கூடும்போது, பணத்தைக் கையாளுவதில் பெண்களின் தன்னம்பிக்கை பன்மடங்கு உயர்வதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

வங்கிகளைத் தேர்ந்தெடுப்பதில் நகர்ப்புற மற்றும் வசதி படைத்த பெண்கள் மிகவும் நுணுக்கமாகச் செயல்படுகின்றனர். 89 சதவீதம் பெண் தொழில்முனைவோர் மற்றும் 84 சதவீதம் பெரும் சொத்து மதிப்புள்ள பெண்கள், உலகளாவிய தொடர்புகளைக் கொண்ட பன்னாட்டு வங்கிகளையே பெரிதும் விரும்புகின்றனர். தங்களின் தொழிலை எல்லைகள் தாண்டி விரிவுபடுத்தவும், சர்வதேச சந்தைகளை எளிதில் அணுகவும் இத்தகைய வங்கிகள் பாதுகாப்பான கூட்டாளியாக இருக்கும் என அவர்கள் நம்புகின்றனர். தொழில் வளர்ச்சிக்கு வெறும் மூலதனம் (பணம்) மட்டுமே போதாது என்பதை உணர்ந்துள்ள பெண் தொழிலதிபர்களில் 44 சதவீதம் பேர் முறையான நெட்வொர்க்கிங் வசதியையும், 40 சதவீதம் பேர் துறை சார்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதலையும் எதிர்பார்க்கின்றனர்.

இந்த அறிக்கை குறித்து டிபிஎஸ் வங்கி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திவ்யேஷ் தலால் கூறுகையில், “பெண் தொழில்முனைவோர் ஒரு வங்கியின் நம்பகத்தன்மைக்கும் சர்வதேசத் தொடர்புகளுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதை இந்த ஆய்வு தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. உலகளாவிய சந்தையில் கால்பதிக்க விரும்பும் பெண்களுக்கு உறுதுணையாக இருக்கும் வங்கிகளையே அவர்கள் நாடுகின்றனர்,” என்று தெரிவித்தார். டிஜிட்டல் செயலிகளின் பயன்பாடு மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை (Work-Life Balance) ஆகியவற்றிலும் இந்தியப் பெண்கள் புதிய மாற்றங்களை நோக்கித் தங்களை தகவமைத்துக் கொண்டு வருவதை இந்த ஆய்வு அறிக்கை விரிவாகப் பதிவு செய்துள்ளது.

Exit mobile version