கோவையில் முதுகலை நிறுவனத்தை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

கோவையின் மருத்துவ அடையாளமாக விளங்கும் கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை (KMCH), தனது சேவையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான புதிய நரம்பியல் அறிவியல் மையம் மற்றும் மருத்துவக் கல்லூரி முதுகலை கல்வி நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 15, 2026) நடைபெற்ற இவ்விழாவில், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய வளாகத்தைத் திறந்து வைத்தார். நரம்பியல் பாதிப்புகள் உலகளாவிய சவாலாக உருவெடுத்து வரும் நிலையில், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மற்றும் ஏஐ (AI) தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த மையம், தென் மாநில மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என அவர் தனது உரையில் குறிப்பிட்டார். கேஎம்சிஎச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முனைவர் நல்லா ஜி.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், துணைத் தலைவர் தவமணி பழனிசாமி, செயல் இயக்குனர் அருண் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுமார் 120 கோடி ரூபாய் முதலீட்டில், 1.75 லட்சம் சதுர அடி பரப்பளவில், ஏழு அடுக்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டடம், ஒரே கூரையின் கீழ் நரம்பியல், நரம்பு அறுவை சிகிச்சை, குடல்-கல்லீரல் சிகிச்சை என ஆறு சிறப்பு மையங்களைக் கொண்டுள்ளது. இதில் இந்தியாவிலேயே முதல்முறையாக ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ARTIS ICONO’ பைப்ளேன் கேத் லேப் மற்றும் ‘NEXARIS’ ஆஞ்சியோ சூட் வசதிகள் கொண்ட நரம்பியல் கதிரியக்க மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மூலம் சிக்கலான ரத்த நாளப் பிரச்சினைகளை அறுவை சிகிச்சையின்றி துல்லியமாகக் கண்டறிந்து குணப்படுத்த முடியும். மேலும், நரம்பியல் சார்ந்த தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (Neuro ICUs) மற்றும் அதிநவீன ஹைப்ரிட் ஆபரேஷன் தியேட்டர்கள் சர்வதேசத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இங்கு செயல்பட்டு வரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் குழந்தைகள் இருதய சிகிச்சை மையங்களும் இக்கட்டடத்தின் மூலம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

சிகிச்சையுடன் மருத்துவக் கல்வியையும் மேம்படுத்தும் நோக்கில், கேஎம்சிஎச் மருத்துவக் கல்லூரி முதுகலை கல்வி நிறுவனம் மூலம் 2025–2026 கல்வியாண்டிற்கான 10 வகையான புதிய முதுகலை மருத்துவப் படிப்புகள் (MD/MS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய மருத்துவக் கழகத்தின் (NMC) அங்கீகாரம் பெற்ற இப்பாடநெறிகள் மூலம் நோயியல், கதிர்வீச்சு மற்றும் எலும்பியல் உள்ளிட்ட துறைகளில் அடுத்த தலைமுறை மருத்துவ நிபுணர்கள் உருவாக்கப்பட உள்ளனர். “நோயாளிகளின் வசதியையும் தரமான சிகிச்சையையும் மையமாகக் கொண்டே இந்த விரிவாக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று செயல் இயக்குனர் அருண் பழனிசாமி தெரிவித்தார். ஒவ்வொரு தளத்திலும் மருந்தகங்கள், ஏடிஎம் மற்றும் ஆய்வக வசதிகள் எனத் தடையற்ற சேவைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோவையின் மருத்துவச் சுற்றுலாத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள இந்த மையம், இந்திய மருத்துவ வரைபடத்தில் கோவையை முக்கிய இடத்தில் நிலைநிறுத்தியுள்ளது.

Exit mobile version