வரும் 2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா சார்பில் விண்வெளியில் சொந்தமாக ஒரு விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என்று இஸ்ரோ (ISRO) தலைவர் நாராயணன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில் உள்ள அரசு வேளாண்மைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் நடைபெற்ற வைரவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பின் அவர் செய்தியாளர்களிடம் இந்தப் புதிய விண்வெளித் திட்டங்கள் குறித்துப் பேசினார். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட இஸ்ரோ தலைவர், ஒரு காலத்தில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த இந்தியா, தற்போது அவற்றின் ஏற்றுமதியாளராக மாறியுள்ளதைப் பெருமையுடன் தெரிவித்தார். தொடர்ந்து, இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் இலக்குகள் குறித்துப் பேசினார்.
எல்.வி.எம். 3 (LVM 3) தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஏவுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் நிறுத்தப்பட்டு வருவதாகவும், ஏவும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சந்திரயான்-4, சந்திரயான்-5 மற்றும் கிரஹயான் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் அமையவிருக்கும் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து, 2027 மார்ச் மாதத்திற்குள் அங்கிருந்து முதல் ராக்கெட் அனுப்பி வைக்கப்படும்.அவர் வெளியிட்ட மிக முக்கியமான அறிவிப்பு, இந்தியாவிற்கான விண்வெளி நிலையம் பற்றியது ஆகும்.
“இந்தியர்களால் 2035ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையம் (Indian Space Station) அமைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் 5 கட்டங்களாக நடத்த இருக்கிறோம்,” என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். இது, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற ஒரு சில நாடுகளின் வரிசையில் விண்வெளி நிலையத்தை நிறுவும் நாடுகளின் பட்டியலில் இணைய வழிவகுக்கும். 2024 ஜனவரி 6 அன்று ஏவப்பட்ட இந்தியாவின் சூரிய ஆய்வு விண்கலமான ஆதித்யா-எல்1-லிருந்து (Aditya-L1) இதுவரை 20 டெராபிட் டேட்டா வந்துள்ளதாகவும், இந்தத் தரவு உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பயன்படும் என்றும் அவர் கூறினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் சுபான்ஷூ சுக்லாவின் ஆராய்ச்சியைப் பயன்படுத்தி, விண்வெளியில் விதை மற்றும் நெல் முளைக்க வைத்து நடத்தப்பட்ட சோதனைகளில் நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. அதில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விண்வெளியில் ஆய்வு முடிவுற்று சுற்றித் திரியும் செயற்கைக் கோள்களில் எரிபொருளை நிரப்பி மீண்டும் ஆய்வுக்காகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ககன்யான் திட்டம் குறித்துப் பேசிய நாராயணன், 2027ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார். இதற்கு முன்னதாக, மனிதர்கள் இல்லாத மூன்று ஏவுகணைகளை (ஆளில்லா விண்கலங்களை) விண்வெளிக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய ஜி-20 செயற்கைக்கோள் பயன்படும் என்றும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
