நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்தியரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டம் பராகலனைச் சேர்ந்த கபில் என்பவர், கலிபோர்னியாவில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று கடையின் வெளியே ஒருவர் இயற்கை உபாதை காரணமாக சிறுநீர் கழித்ததை கபில் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகராறு தீவிரமடைந்த நிலையில், அந்த நபர் தன்னுடன் இருந்த துப்பாக்கியை எடுத்து கபில்மீது சரமாரியாக சுட்டுள்ளார். இதில் கபில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
3 ஆண்டுகளுக்கு முன் சட்டவிரோதமாக அமெரிக்கா சென்ற கபில், அங்கு கைது செய்யப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னர் அமெரிக்காவில் தங்கி வந்த கபிலின் பெற்றோரும், இரு சகோதரிகளும் தற்போது சொந்த ஊரில் வசித்து வருகின்றனர்.
இந்த சம்பவச் செய்தி சொந்த ஊருக்கு வந்தவுடன் அங்கிருக்கும் குடும்பத்தினரும், உறவினர்களும் துயரத்தில் ஆழ்ந்தனர். கபிலின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு வர மத்திய அரசும், ஹரியானா மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.