அமெரிக்காவில் இந்தியர் தலையை துண்டித்து கொலை !

டல்லாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில டல்லாஸ் பகுதியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹோட்டல் மேலாளர் ஒருவர் தலையை துண்டித்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட சந்திரமவுலி நாகமல்லையா (50) என்பவர், டல்லாஸில் உள்ள சாலையோர ஹோட்டலில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். தனது மனைவி மற்றும் மகனுடன் அங்கு வசித்து வந்தார்.

சமீபத்தில், ஹோட்டலில் இருந்த வாஷிங் மெஷின் பழுதடைந்ததை கருத்தில் கொண்டு, அதை யாரும் பயன்படுத்தக்கூடாது என சந்திரமவுலி பணியாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால், அதே ஹோட்டலில் பணியாற்றிய கோபஸ் மார்டினெஸ் (37) என்பவர் அதை மீறியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது.

அந்த நேரத்தில், ஆத்திரமடைந்த மார்டினெஸ் கத்தியை எடுத்து சந்திரமவுலியை பலமுறை குத்தினார். தப்பியோட முயன்ற அவரை துரத்திச் சென்ற அவர், சந்திரமவுலியை சரமாரியாக தாக்கியதோடு மட்டுமின்றி, கழுத்தை அறுத்து தலையை துண்டித்து சாலையில் எறிந்தார். சம்பவத்தை பார்த்த சந்திரமவுலியின் மனைவி, மகன் மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, குற்றவாளி மார்டினெஸை கைது செய்தனர். விசாரணையில், இவர் ஏற்கனவே ஆட்டோ திருட்டு மற்றும் அடிதடி வழக்குகளில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது, கொலை வழக்கில் கைதாகியுள்ள மார்டினெஸுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அந்த பகுதி மக்கள் மற்றும் இந்திய சமூகம் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Exit mobile version