இந்தியாவைச் சேர்ந்த 18 வயது சிறுவனான லலித் படிதார், முகத்தில் 95% முடியுடன் உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, மார்ச் 2025-இல் வெளியிடப்பட்ட கின்னஸ் உலக சாதனை அறிக்கையில், லலித்தின் முகத்தில் ஒரு சதுர செ.மீ.க்கு 201.72 முடிகள் வளர்ந்திருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் “முகத்தில் அதிக அளவு முடி கொண்டவர்” என்ற பிரிவில் அவர் சாதனை படைத்துள்ளார்.
லலித் ‘ஹைபர்டிரிகோசிஸ்’ (Hypertrichosis) எனப்படும் அரிதான ஒரு மருத்துவநிலையால் பாதிக்கப்பட்டுள்ளார். இது உலகளவில் மிகவும் குறைந்த அளவில் காணப்படும் நோயாகும். இடைக்காலத்தில் (500–1500) பதிவு செய்யப்பட்ட சுமார் 50 வழக்குகளில் லலித்தின் நிலையும் ஒன்றாகும். அதனால், கின்னஸ் அவரது தனித்துவத்தை “ஒரு பில்லியனில் ஒன்று” என்று குறிப்பிட்டுள்ளது.
முகத்தில் மிகுந்த அளவில் முடி வளர்ச்சியால், லலித்தின் தோற்றம் புராணங்களில் வரும் ஓநாய் போன்றதாகக் காணப்படுகிறது. ஆரம்பத்தில் அவரைச் சுற்றியிருந்தவர்கள் பயமடைந்ததாகவும், பின்னர் அவரை அறிந்தபோது தான் வித்தியாசமில்லை என்பதை உணர்ந்ததாகவும் லலித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “முதலில் என்னைக் கண்டு அனைவரும் பயந்தார்கள். ஆனால் பிறகு என்னை புரிந்துகொண்டு பழகியபோது, நான் அவர்களைப் போலவே தான் என்று உணர்ந்தார்கள். வெளிப்புறத்தில் வித்தியாசமாக இருந்தாலும், உள்ளுக்குள் நான் சாதாரண மனிதன் தான். இந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். என் தோற்றம் எனக்குப் பிடித்திருக்கிறது; அதை மாற்ற விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.